ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நரிக்குறவர் வீட்டில் உணவருந்தியதுடன், அங்கிருந்த குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார்.
திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 101 நரிக்குறவ இன மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டைகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்தவர், அங்குள்ள ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். நரிக்குறவ மாணவிகள், அவருக்கு பாசிமாலை அணிவித்தும், பூ கொடுத்தும் வரவேற்றனர்.
அங்கு குடியிருக்கும் நபர் ஒருவர் முதல்வரை உணவு அருந்த அழைத்தார். அதை ஏற்றுக்கொண்டு அவர் கொடுத்த இட்லி வடையுடன் கூடிய சிற்றுண்டியை ருசித்து சாப்பிட்டார். அப்போது அருகில் இருந்து சிறுமிக்கும் ஊட்டிவிட்டும் மகிழ்ந்தார். தொடர்ந்து, தேநீர் அருந்தினார். அப்போது, சாப்பாடு காரமாக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். அதற்கு பதில் கூறிய நரிகுறவ மக்கள், காரமாக சாப்பிடுவதால்தான், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் தங்களுக்கு ஏற்படுவது இல்லை என்று கூறினர்.
இதன் தொடர்ச்சியாக நரிக்குறவ மக்கள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.