திருவள்ளூர்: “விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள், துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இது பெண்ணுரிமைக்காகப் போராடிய திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த வெற்றியை பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினி வடிவிலும், ஆவடியைச் சேர்ந்த திவ்யா வடிவிலும் பார்க்கிறேன். அதனால்தான் எப்படி அஸ்வினி வீட்டிற்குப் போனேனோ, அதேபோல் இன்று திவ்யா, தர்ஷிணி வீட்டிற்கும் சென்றேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் பேசியது: “தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நான் உத்தரவிட்டேன். நரிக்குறவர்கள், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்களையும் நீங்கள் சென்று ஆய்வு செய்து, அந்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான அரசின் நலத்திட்ட உதவிகள் என்னென்ன தேவைப்படுகிறது என்பதற்கு ஒரு பட்டியல் எடுத்து, ஆய்வு செய்து, அந்த அறிக்கையை உடனடியாக அனுப்பிட வேண்டுமென்று நான் உத்தரவிட்டேன். அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு கடந்த நான்கு, ஐந்து மாதங்களில் நரிக்குறவர், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது ஒரு மிகப் பெரிய சாதனை. இவ்வளவு கொடுத்ததற்குப் பிறகும் இன்னும் மீதம் இருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. அதனால் மேலும், வழங்கப்படவேண்டிய நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வரும் மே மாதம் இறுதிக்குள் நிச்சயமாக இவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இது விளிம்புநிலை மக்களுக்கான அரசு. எனவேதான் அவர்களை ஒவ்வொரு குடும்பமாகத் தேடி ஒவ்வொரு அடிப்படை தேவைகளை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வருகிறோம். பெண்ணுரிமைக்காகப் போராடிய இயக்கம் திராவிட இயக்கம். அந்த இயக்கம் ஆட்சியிலிருந்தபோதெல்லாம் பெண்ணுரிமையை நிலைநாட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள், துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து உள்ளபடியே ஆச்சரியமாக இருக்கிறது, அதிசயமாக இருக்கிறது, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இதுதான் திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமைக் குரல், இந்தப் பெண பிள்ளை வழியாக இன்றைக்கு ஒலிக்கக்கூடிய காட்சியை நாம் பார்க்கிறோம்.
அதனால்தான் விளிம்புநிலை மாணவிகள், திவ்யா, பிரியா, தர்ஷிணி ஆகிய மூன்று பேரையும் கோட்டையில் உள்ள எனது அறைக்கே அழைத்துப் பேசினேன். முதல்வர் அறைக்கு வந்தார்கள். அவர்களிடம் ஒரு 10 நிமிடம் பேசினேன். ஃபோட்டோ எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
பெண்ணுரிமைக்காகப் போராடிய திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, இந்த வெற்றி என்பதை நான் பெருமையோடு சொல்கிறேன். ஆகவே அந்த வெற்றியை யார் மூலமாகப் பார்க்கிறேன் என்றால், மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினி வடிவிலும், ஆவடியைச் சேர்ந்த திவ்யா வடிவிலும். உள்ளபடியே நான் நெகிழ்ந்து போனேன், மகிழ்ச்சியடைந்தேன். அதனால்தான் எப்படி அஸ்வினி வீட்டிற்குப் போனேனோ, அதேபோல் இன்று திவ்யா, தர்ஷிணி வீட்டிற்கும் வந்திருக்கிறேன்.
நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களின் வாழ்வில் ஒரு அணையா விளக்கை ஏற்றிடும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதனுடைய அடையாளம்தான் அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்ச்சி. இந்த அரசு உங்களுக்காக என்றைக்கும் துணைநிற்கும். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்ன பிரச்சனை இருக்கிறதோ, அதற்கெல்லாம் சட்டரீதியாக நிச்சயமாக அதையெல்லாம் நாங்கள் நிறைவேற்றி தருவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி தமிழக மக்களுக்காக ஒவ்வொரு இலக்கினை எட்டிடவும் இந்த திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, இது தொடரும், இந்த அரசு உங்களுக்காகத் தொடர்ந்து பாடுபடும்” என்று அவர் கூறினார்.