நரிக்குறவ மக்களுக்கு மு.க.ஸ்டாலின் இன்று தேடி சென்று உதவி- வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கினார்

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் திருமுல்லைவாயல் மற்றும் ஆவடியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று 197 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

முதல் நிகழ்ச்சியாக இன்று காலை திருமுல்லைவாயல் ஜெயாநகர் நரிக்குறவர் குடியிருப்பில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.

இதில் 39 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 20 பேருக்கு குடும்ப அட்டைகளையும், 4 பேருக்கு தலா ரூ.1000 முதியோர் உதவித்தொகையையும் வழங்கினார். பின்னர் சாலையோர வியாபாரிகள் 38 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடன் உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் சிறுவர்களுடன் கலந்துரையாடினார். அவருடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி பஸ்நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் கொடுத்த மனுக்களை மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு அங்கு புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாயை திறந்து வைத்தார். பின்னர் நரிக்குறவர் மாணவ- மாணவிகள் எஸ்.தர்ஷினி, ஆர்.பிரியா, கே.திவ்யா ஆகியோருடன் கலந்துரையாடினார். அவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் பரிசாக வழங்கினார்கள்.

அதன்பிறகு பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, பட்டா ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 30 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 18 பேருக்கு குடும்ப அட்டைகளையும், முதியோர்கள் 6 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகையையும், 42 பேருக்கு பட்டாவையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? நீங்கள் நன்றாக இருந்தால் நான் மட்டுமல்ல இந்த நாடே நன்றாக இருக்கும். இப்போது ஒரு சகோதரி வீட்டில் போய் உட்கார்ந்து சோறு சாப்பிட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். கொஞ்சம் காரமாக இருந்தது.

என்னம்மா இவ்வளவு காரமாக இருக்கிறது என்று கேட்டதற்கு, காரமாக நாங்கள் சாப்பிட்டால் தான் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். எங்கள் இடத்தில் கொரோனா கூட வர முடியவில்லை என்று பெருமையோடு சொன்னார்.

இதில் நான் கற்றுக்கொண்டேன். இனிமேல் நானும் காரம் அதிகமாக சேர்த்துக்கொள்ளப் போகிறேன். அதை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்.

இந்த ஊரைப்பற்றி, ஊரில் இருக்கும் உங்களைப் பற்றி, உங்களுக்கு ஏற்கனவே இருந்த சங்கடங்கள், பிரச்சினைகள், துன்பங்கள் ஏற்கனவே எப்படி இருந்தது. அவை எப்படி படிப்படியாக சரிசெய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் நாசர் உங்களிடம் பேசினார்.

நான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் டிவி பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு செய்தியை பார்த்தேன். அந்த செய்தி வாட்ஸ்அப்பிலும் வந்தது. மாமல்லபுரம் அருகே இருக்கும் பெருமாள் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் நரிக்குறவ பெண்ணுக்கு உணவு அளிக்க மறுத்து இருக்கிறார்கள். உள்ளேயே விட மறுத்து இருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் இருக்கக் கூடிய ஒரு பெண் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அச்சப்படாமல் அதை செய்தியாக வீடியோவில் பேசினார். நான் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதிசயப்பட்டேன். ரொம்ப வருத்தப்பட்டேன்.

உணவளிக்கக்கூடிய நிகழ்ச்சியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அனுமதிக்காமல் இப்படி ஒரு கெட்ட காரியத்தை செய்திருக்கிறார்களே என்று நான் கோபப்பட்டேன். ஆத்திரப்பட்டேன். உடனே அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த செய்தியை சொன்னேன்.

நீங்கள் பார்த்தீர்களா என்றேன். கோவிலில் சாப்பாடு போடும் இடத்தில் நரிக்குறவர் இன பெண்ணை அனுமதிக்காமல் இந்த கொடுமையை செய்திருக்கிறார்களே இது நியாயமா? உடனடியாக நீங்கள் அங்கு போங்கள். என்ன என்று விசாரியுங்கள். அந்த பெண்ணை அதே கோவிலில் எல்லோருக்கும் மத்தியில் உட்காரவைத்து சாப்பிட வைக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல அமைச்சராக இருக்கும் நீங்கள் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். அதன் பிறகு அவர் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து அந்த கோவிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்து பக்கத்திலேயே உட்கார்ந்து உணவருந்திய காட்சியை நான் பார்த்தபிறகுதான் எனக்கு நிம்மதியானது சந்தோசமானது.

இது எனக்கு பெருமை என்பதை விட அந்த பெண் தைரியமாக வாதாடினார். அந்த பெண்ணின் பெயர் அஸ்வினி. அந்த பெண் வாதாடி போராடி வெளிப்படுத்தினார். அதற்காக அந்த பெண்ணுக்கு நான் இங்கிருந்தே எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பின்னர் அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலை என்ன? அந்த பெண் வாழும் பகுதியில் உள்ள நிலைமைகள் என்ன என்பதை பற்றி அறிந்து குறைகளை கேட்டு அந்த பெண்ணின் உறவினர்கள் வாழும் பூஞ்சேரி பகுதிக்கு நானே நேரடியாக போனேன்.

அங்குள்ள நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்தேன். ஒவ்வொருவரிடமும் கருத்துக்களை கேட்டேன். உங்கள் குறைகள், பிரச்சினைகளை தைரியமாக சொல்லுங்கள். உடனடியாக செய்ய முடியாவிட்டாலும் படிப்படியாக நிச்சயமாக உறுதியாக செய்து கொடுப்போம் என்றேன். அவர்கள் பல பிரச்சினைகளை சொன்னார்கள்.

அதில் முக்கியமாக நீண்ட காலமாக வழங்கப்படாத வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை பட்டாக்கள், சாதி சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படாமல் இருந்தது. 4.53 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நானே அந்த நிகழ்ச்சியில் போய் கலந்துகொண்டு வழங்கி இருக்கிறேன்.

பூஞ்சேரி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இப்படி பல பகுதிகள் இருக்கிறது. அந்த பகுதிகளில் இந்த பிரச்சினைகள் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நான் உத்தரவிட்டேன்.

நரிக்குறவர்கள், பழங்குடியின மக்கள், இதர விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்களையும் நீங்கள் போய் ஆய்வு செய்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் என்னென்ன தேவைப்படுகிறது என்று ஒரு பட்டியல் எடுத்து ஆய்வு செய்து, அந்த அறிக்கையை உடனடியாக எனக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு கடந்த நாலைந்து மாதங்களில் நரிக்குறவர், பழங்குடியின மக்கள், இதர விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் ஒவ்வொருவருடைய குடும்பத்துக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

புள்ளி விவரத்தோடு சொல்லவேண்டுமென்றால் இதுவரை 2084 குடும்பங்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகளும், 701 குடும்பங்களுக்கு கழிவறை வசதிகளும், 2091 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளும், 226 வீடுகளுக்கு மின்சார இணைப்புகளும், 5991 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 7824 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகளும், 2860 குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளும், 9468 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும், 15690 பேருக்கு சாதி சான்றிதழ்களும், 3437 பேருக்கு நலவாரிய அட்டைகளும், 4605 பேருக்கு மாற்றுத்திறனாளி அட்டைகளும், 3147 பேருக்கு முதியோர் ஓய்வூதியமும், 339 பேருக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியமும், 233 பேருக்கு ஆதரவற்றோர் உதவித்தொகையும், 1564 பெண்களுக்கு விதவைகள் ஓய்வூதியமும், 39 திருமணமாகாத பெண்களுக்கு உதவித்தொகையும், 7955 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அறிக்கைகளும், 507 தெருவிளக்குகளும், 37 குடியிருப்புகளில் வடிகால் வசதிகளும், 152 குடியிருப்புகளில் சாலை வசதிகளும், 67 குடியிருப்புகளில் குடிநீர் வசதியும், 127 ஆண்களுக்கு திறன் பயிற்சிகளும், 228 பெண்களுக்கு திறன் பயிற்சிக்கு அட்டைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை.

இவ்வளவு கொடுத்ததற்கு பிறகும் இன்னும் நிச்சயம் கொடுக்கவேண்டி இருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. மேலும் வழங்கப்படக்கூடிய நலத்திட்டங்கள் எல்லாம் வரக்கூடிய மே மாதத்துக்குள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படி நரிக்குறவர், பழங்குடியினர், விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு நாங்களே தேடி வந்து அந்த உதவிகளை செய்யக்கூடிய ஒரு அரசாக நம்ம அரசு அமையும். ஒவ்வொரு அடிப்படை தேவைக்கும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வருகிறோம்.

பெண்ணுரிமைக்காக போராடிய இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம். அந்த இயக்கம் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் பெண்ணுரிமையை நிலைநாட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த வகையில் பெண்ணுரிமையை உலகிற்கு உணர்த்தக்கூடிய வகையில் இன்னொரு நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவி திவ்யா வீடியோவில் பேசியதை பார்த்தேன். உடனே அமைச்சர் ஆவடி நாசருக்கு நான் தொடர்பு கொண்டேன். அந்த வீடியோவை அனுப்பி வைத்தேன். அவரும் பார்த்ததாக கூறி அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

மறுபடியும் போய் அங்கு என்னென்ன பிரச்சினைகள் என்று அந்த மக்களோடு மக்களாக இருந்து எனக்கு செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் உடனடியாக செல்போனில் தொடர்புகொண்டார். இங்கு மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று செல்போனில் வாட்ஸ்அப்பில் தெரிவித்த அவர், திவ்யா பக்கத்தில் இருப்பதாக கூறினார். உடனே போனை கொடுங்கள் என்று வீடியோவில் நானே பேசினேன்.

என்னம்மா திருப்தியா… நீ சொன்ன குறைகளை உடனடியாக கேட்டு இருக்கிறோம். அமைச்சர் மட்டுமல்ல இன்னும் 10 நாட்களில் எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ, உடனடியாக நான் வருகிறேன். வந்தால் சாப்பாடு போடுவியா என்று கேட்டேன்.

நிச்சயமாக வாருங்கள் கறி சோறு போடுகிறோம் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு உங்களை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

எனவே விளிம்புநிலை சமுதாயத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் இன்று துணிச்சலாக பேசுவதை பார்த்து ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதுதான் திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமை குரல். இந்த பெண் பிள்ளை வழியாக ஒலிக்கக்கூடிய காட்சியை பார்க்கிறோம்.

எனவே தான் விளிம்பு நிலை மாணவிகள் திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகிய 3 பேரையும் கோட்டையில் இருக்கும் என்னுடைய அறைக்கே அழைத்தேன். முதல்-அமைச்சர் அறைக்கே வந்தார்கள். அவர்களிடம் 10 நிமிடம் பேசினேன். போட்டோ எடுத்துவிட்டு சென்றனர்.

பெண்ணுரிமைக்காக போராடிய திராவிட இயக்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இந்த வெற்றி என்று நான் பெருமையோடு சொல்கிறேன். அந்த வெற்றியை திவ்யா மூலமாக பார்க்கிறேன். அஸ்வினி வடிவில் பார்க்கிறேன். அதை காணொலியில் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன்.

எனவே தான் எப்படி அஸ்வினி வீட்டுக்கு போனேனோ அதேபோல் இன்று திவ்யா வீட்டுக்கும் வந்திருக்கிறேன். தலைவர் கலைஞர் இன்று நம்மை விட்டு மறைந்தாலும், நம்முடைய ஊனோடு உதிரத்தோடு நெஞ்சில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய காலத்தில் தான் திருநங்கைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், நசுக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இன்று பல திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். அவர்கள் வழியில் இந்த ஆட்சி நிச்சயமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நமது அரசு நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுடைய வாழ்வில் அணையா விளக்கை ஏற்றிடும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது. அதனுடைய அடையாளம் தான், அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி. நான் எத்தனையோ நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறேன். ஏற்கனவே சென்னை மாநகரத்தின் மேயராக இருந்துள்ளேன். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தேன், துணை முதல்- அமைச்சராக இருந்தேன். இப்போது உங்கள் அன்போடு, ஆதரவோடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன்.

இந்த பொறுப்புகளில் இருந்த போது எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு போய் இருந்தாலும் மகிழ்ச்சியோடு, சந்தோசத்தோடு கூடி இருக்கக்கூடிய உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறபோது எனக்கு அளவிடாத மகிழ்ச்சி வந்திருக்கிறது. இந்த அரசு உங்களுக்காக என்றைக்கும் துணை நிற்கும்.

நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களின் பிரச்சினைக்கு தீர்வை சட்ட ரீதியாக நிச்சயமாக நிறைவேற்றி தருவோம் என்ற உறுதியை எடுத்துச்சொல்லி, தமிழ்நாட்டு மக்களுக்காக ஒவ்வொரு இலக்கை எட்டிடவும், இந்த திராவிட மாடல் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இது தொடரும். இந்த அரசு உங்களுக்கு தொடர்ந்து பாடுபடும்.

நலத்திட்டங்களை நிறைவேற்றி உங்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மீண்டும் ஒருமுறை எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.