உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவருகிறது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்துவரும் நிலையிலும், ரஷ்யா அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைனில் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, உக்ரைனின் மரியுபோலைக் கைப்பற்றியதாகவும், 1,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் கடற்படையினர் சரணடைந்ததாகவும் ரஷ்யா கூறியது.
இந்த நிலையில், போர் நடைபெற்றுவரும் உக்ரைனுக்கு உயரதிகாரிகளை அனுப்புவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் உக்ரைனுக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது, வருங்காலத்தில் கீவ் நகருக்கு தானே நேரில் செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டு, அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.