"நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்ப கவனம் செலுத்தி வருகிறோம்" – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதிலும், நீதித்துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நீதித்துறை சார்ந்த இரண்டு தின மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தற்பொழுது நீதித்துறையில் கடுமையான பாரம் இருப்பதாகவும் அதிகப்படியான வழக்குகள் தேங்கி இருப்பதாகவும் இவற்றை சமாளிக்க, நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவது மற்றும் நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றிற்கு தான் முன்னுரிமை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
போதுமான அளவிலான நீதிமன்றங்கள் மற்றும் அதற்கான கட்டுமானங்கள் இருந்தால்தான் பொதுமக்கள் எளிதாக நீதியை நாடி நீதிமன்றத்திற்கு வரமுடியும் என்றும், நீதிமன்றத்திற்கு சென்றால் தங்களுக்கு நியாயம் கிடைக்க பல வருடங்கள் ஆகும் என்று பொதுமக்கள் நினைப்பதாகவும், இதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் அவர் பேசினார்.
image
எனவேதான் முடிந்தவரை உயர் நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் காலிப்பணியிடங்கள் இல்லாத வகையில் பார்த்துக் கொள்வதாகவும் இன்னமும் நீதிமன்றங்களை அதிக அளவில் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதிவாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் போதுமான ஆய்வுகளை செய்துவருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் நீதிபதிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது தொடர்பாக பேசிய தலைமை நீதிபதி, அதனைத் தடுப்பதற்கு போதுமான வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்து வருவதாகவும் நீதிபதிகள் தங்களது கடமையை பயம் இல்லாமல் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.