திருச்சூர்,-மலையாள நடிகரும், பா.ஜ., – எம்.பி.,யுமான சுரேஷ் கோபி, மலையாள புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோருக்கு பணம் தந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலையாள புத்தாண்டை குறிக்கும் ‘விஷூ’ பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ‘விஷூ கைநீட்டம்’ எனப்படும், பாரம்பரிய முறைப்படி பணம், பொருள் தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடக்கும்.
இதன்படி பா.ஜ., – எம்.பி., சுரேஷ் கோபி, சில தினங்களுக்கு முன், திருச்சூரில் விஷூ கைநீட்டம் விழா நடத்தினார். கார் மேல் அமர்ந்தபடி, சிறார், முதியோர், பெண்களுக்கு 1 ரூபாய் நோட்டை இனாமாக தந்தார்.பலர், குறிப்பாக பெண்கள் பணம் பெற்ற பின், சுரேஷ் கோபியின் காலில் விழுந்து வணங்கிச் சென்றனர்.
இதற்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சுரேஷ் கோபி பெண்களை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.ஆனால், ”ஹிந்து தர்மப்படி தானம் பெறுவோர், வணங்கி நன்றி செலுத்துவது வழக்கம்; அதில் தவறில்லை,” என சுரேஷ் கோபி தெரிவித்து உள்ளார். என்றாலும், திருவனந்தபுரத்தில் நடந்த விஷூ கைநீட்டம் விழாவில், சுரேஷ் கோபியின் காலில் விழ வேண்டாம் என பா.ஜ.,வினர் பெண்களை தடுத்து விட்டனர்.
Advertisement