இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்து தெரித்துள்ள அமெரிக்கா, இருதரப்பு உறவை மதிப்பதாகவும், நீண்டகால ஒத்துழைப்பை பாக்., தொடர வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக அமெரிக்கா – பாக்., இடையிலான உறவு நெருடலாகவே இருக்கிறது. குறிப்பாக, ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின், அது மேலும் மோசமடைந்தது.இந்நிலையில், தன் அரசை கவிழ்க்கும் சதியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதை, அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கை:
புதிதாக பொறுப்பேற்றுள்ள பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்துக்கள். கடந்த 75 ஆண்டுகளாக, பாக்., மிக முக்கிய கூட்டாளியாக திகழ்கிறது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். பாக்., அரசுடனான எங்கள் நீண்டகால ஒத்துழைப்பை தொடர நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அளித்துள்ள பதில்:
பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் வைத்து அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர விரும்புகிறோம். சமத்துவம், பரஸ்பர நலன் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்த உறவு மேலும் வலுப்படுவதை எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement