கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பா.ஜ.க உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீல் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்ததையடுத்து, `எதிர்க்கட்சிகள் யாரும் இந்த விவகாரத்தில் நீதிபதியாக வேண்டாம்!’ என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்க்கட்சிகளைச் சாடியுள்ளார்.
கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சரான கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பா.ஜ.க உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீல், கடந்த செவ்வாய்க்கிழமை உடுப்பி லாட்ஜ் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், சந்தோஷ் பட்டீலை தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா, அவர் உதவியாளர்கள் 2 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, ஈஸ்வரப்பா பதவி விலக வேணடும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறிவந்த நிலையில், ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நேற்று அறிவித்தார்.
இருப்பினும், “அமைச்சரின் ராஜினாமா மட்டும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகாது. ஈஸ்வரப்பா மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட வேண்டும்” என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “தன் ராஜினாமா முடிவை ஈஸ்வரப்பா சொந்தமாக எடுத்துள்ளார். இன்று மாலை அவர் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார். விசாரணைக்குப் பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும். எனவே இந்த விஷயத்தில், எதிர்க்கட்சிகள் விசாரணை அதிகாரியாகவோ அல்லது நீதிபதியாகவோ மாற வேண்டிய அவசியமில்லை” என காங்கிரஸை மறைமுகமாகச் சாடினார்.