புதுடெல்லி: டெல்லியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் குறித்த தகவல்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. இந்த அருங்காட்சிய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். முன்னதாக அருங்காட்சியகத்துக்கான முதல் டிக்கெட்டை அவர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அரசியலமைப்பு ஜனநாயகத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதில் நாட்டின் பிரதமர்கள் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களை நினைவு கூர்வது, சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிந்து கொள்வதாகும். சுதந்திரம் பெற்ற பிறகு அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசும், நாடு இன்று அடைந்துள்ள உயரத்திற்கு கொண்டு செல்வதில் பங்களித்துள்ளது. நமது நாட்டின் பெரும்பாலான பிரதமர்கள், ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். விவசாய குடும்பம், ஏழை குடும்பம், தொலைதூர கிராமங்களில் இருந்து பிரதமர் பதவிக்கு வருவது என்பது இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய அம்சம் என்பது, அது காலப்போக்கில் மாறிக்கொண்டே இருப்பது தான். ஒன்றிரண்டு விதிவிலக்குகளை தவிர்த்து, ஜனநாயக வழியில் ஜனநாயத்தை வலுப்படுத்தும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் கொண்டுள்ளோம். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் முன்னாள் பிரதமர்கள் குறித்த இந்த அருங்காட்சியம், ஒரு சிறந்த உத்வேகமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் 14 பேரின் வரலாறு, அவர்களின் பதவிக் காலத்தின்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாட்டை எவ்வாறு வழி நடத்தினார்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.