பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் – ஜவாஹிருல்லா முதல்வருக்கு கடிதம்  

சென்னை: முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையங்குகளில் வெளியானது. இந்த படத்தில் முஸ்லிம் தவறாக சித்தரிப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,” தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

அதேநேரம், அதை குலைப்பதற்காகவும், தங்களின் அரசியல் பிழைப்பிற்காகவும் மதவாத பாசிஸ்டுகள், அரசுக்கு பல்வேறு இடையூறுகளையும் சமூகத்தில் பல குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். திரையுலகையும் இந்த தீயோரின் களமாக மாற்றும் முயற்சிகள் நெடுங்காலமாகவே நடந்து வருகின்றன.

விஸ்வரூபம், துப்பாக்கி உள்ளிட்ட பல திரைப்படங்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன. முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் காட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு தற்போது “பீஸ்ட்” என்ற படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது.

குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே முதல்வர் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலைத் தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.