மிக விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும், ஒரு புதிய சுபீட்சமான நாடு உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர் தனது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையாகவே நான் இதில் கலந்து கொள்ள தீர்மானித்ததற்கான காரணம், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியான போராட்டமொன்றை முன்னெடுப்பதும், 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு நீதி கோருவதுமே.
இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை,
இதனை நினைவுகூரும் முகமாக கடந்த சனிக்கிழமை கட்டுவாப்பிட்டியில் ஆரம்பித்து சுமார் 38 கிலோமீட்டர் தூரம் 12 மணித்தியாலங்களாக பேரணியாக கொச்சிக்கடை தேவாலயத்திற்கு வந்தோம்.
இந்த 12 மணித்தியாலங்கள் 2019 ஏப்ரல் 21 தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு நீதி கோரியும் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வு கிடைக்கவும் நாம் அந்த பேரணியை நடத்தினோம்.
இன்று இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக நான் இங்கு 24 மணித்தியால உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன்.
எனது பிரதான கோரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே.
அதேபோல் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்.
ஆகவே நான் இன்று எந்த உணவையும் உட்கொள்ளாது என்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை இங்கு ஆரம்பிக்கின்றேன்.
மிக விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்குமென்று நம்புகின்றேன். எம் அனைவருடைய கோரிக்கைகளும் நிறைவேற்றபட்டு ஒரு புதிய சுபீட்சமான நாடு உருவாகும் என நாம் அனைவரும் எதிர்பார்க்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.