புதுச்சேரி மாநிலத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. இதனால் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, எனவே தடைக்காலத்திலே மீனவர்களுக்கான நிவாரணத்தை புதுச்சேரி அரசு வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வங்கக்கடல் பகுதியில் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் இன்றுமுதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது.
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகஙகளுக்கு வந்து சேர்ந்தது. அதே போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மோற்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகளும் இன்று காலை முதல் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மீன் பிடித்துறைமுகஙகளில் மீன்கள் கையாளும் பணிகள் நடைபெறதால், மீன் பதப்படுத்தப்படும் பணிகளும் நிறுத்தப்பட்டு மீன் பிடித்துறைமுகங்கள் அனைத்தும் மூடப்பட்டது.
கடலுக்கு செல்லும் 50 ஆயிரம் மீனவர்கள், மீன்கள் பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல், மொத்த விற்பனை செய்வோர் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 61 நாட்களுக்கு வேலை இழக்கின்றனர். ஆகவே இந்த மீன் பிடித்தடைக்காலத்தின் போது அரசு வழங்கும் தடைக்கால நிவாரணத்தை, தடைக்காலம் தொடங்கியவுடனே புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM