ஹைதராபாத்: “அதிகரித்து வரும் நிலுவை வழக்குகளால் நீதித்துறை மீது அதிகமான சுமைகள் இருக்கின்றன. வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கு போதுமான நீதிமன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில நீதித்துறை அதிகாரிகளின் மாநாடு 2022-ன் தொடக்க நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “நீதித்துறையில் உள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவதே முக்கியக் கவலையாக இருக்கிறது. போதுமான எண்ணிக்கையிலான நீதிமன்றங்கள் வழங்கும்போதுதான் மக்கள் எளிதாக நீதிமன்றங்களை அணுக முடியும். நமது நீதித்துறை ஏற்கெனவே அதிமான சுமையில்தான் இருக்கிறது.
நான் நீதிமன்றங்களில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று புள்ளிவிவரங்களைக் கூறி, நான் உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை. தற்போது உள்ள சூழலில், நீதிமன்றத்தை அணுகும் ஒருவருக்கு நீதி கிடைக்க எவ்வளவு நாட்களாகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.
காலிப்பணியிடங்கள் குறித்து சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, “பல்வேறு தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனை விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அதிகார மையம் அதனை எளிதாக எடுத்துக்கொள்கிறது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தீர்ப்பாங்களின் உறுப்பினர்கள் சேவை மற்றும் பதவிக் காலத்திற்கான விதிமுறைகளை வகுக்கும் தீர்ப்பாய சீர்திருத்தங்கள் ஆணை 2021-ஐ கடந்த ஜூலை 2021-ல் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. ஆனால், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், முந்தையச் சட்டத்தைப் போல கணிசமான விதிகளைக் கொண்ட தீர்ப்பாய சீர்திருத்த மசோதா 2021-ஐ அரசாங்கம் கொண்டு வந்தது. அப்போது இருந்து, உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள் குறித்த பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்போது பல முறை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.