மதுரை சித்திரை திருவிழா  தேரோட்டம்:  பக்திகோஷத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான தேரோட்டம் இன்று நடந்தது. மாசி வீதிகளில் அசைந்தாடி சென்ற தேர்களை பக்தி கோஷங்கள் எழுப்பி வடம்பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.

மதுரை சித்திரைத்திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்குப்பின், பக்தர்கள் பங்கேற்புடன் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி-சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி தினமும் காலை, இரவு இரு வேளையிலும் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பட்டாபிசேகம், திக் விஜயத்தை தொடர்ந்து நேற்று மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.

மீனாட்சி திருக்கல்யாணத்தை கோயிலுக்குள் வந்து பார்க்க முடியாத முதியவர்கள், பக்தர்கள் உள்ளிட்டோரின் குறையை போக்கும் விதமாக திருக்கல்யாணத்திற்கு அடுத்த நாள் மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் பிரியா விடையுடன் மணக்கோலத்தில் தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் திருத் தேரோட்டம் நடப்பது வழக்கம். இத்தேர்களில் அனைத்து தேவர்களும் எழுந்தருளுவதால் அனைத்து தெய்வங்களையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதற்கு சமம் என்பதால் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சித்திரைத் திருவிழாவின 11-வது நாள் விழாவான தேரோட்டத்தையொட்டி வண்ணத்துணிகளாலும், மலர்களாலும் தேர்கள் அலங்கரிக்கப்பட்டன. இன்று அதிகாலை கீழமாசி வீதியிலுள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஒரே வாகனத்தில் வந்த சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆதாரதனைகளும் நடந்தன. சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்துடன் மீனாட்சியும், பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் திருமணக்கோலத்தில் எழுந்தருளினர். சப்பரங்களில் விநாயகரும், சுப்பிரமணியரும் வலம் வந்தனர். அங்குள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

காலை 6 மணிக்கு முதலில் பெரிய தேரும், சிறிது நேரத்தில் சிறிய தேரும் புறப்பட்டன. தேர்களுக்கு முன்பாக அலங்கரித்த யானைகளும், இதைத்தொடர்ந்து விநாயகர், முருகன், நாயன்மார்கள், சண்டிகேசுவரர் எழுந்தருளி சப்பரங்களில் சென்றன. கீழ மாசி, தெற்கு மாசி,மேலமாசி, வடக்குமாசி வீதிகளில் அசைந்தாடியபடி சென்ற தேர்களை ‘ ஹரஹர சுந்தர மகாதேவா, சம்போ சங்கர மகாதேவா, மீனாட்சி, சுந்தர மகாதேவா என்று பக்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மேலும், மாசி வீதிகளிலும், கட்டிடங்களின் மாடியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேர்களில் வலம் வந்த மீனாட்சி -சுந்தரேசுவரரை தரிசித்தனர். இத்தேரோட்டத்தை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, தென்மாவட்ட அளவிலும், பக்தர்கள் குவிந்ததால் மாசிவீதிகள் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் 4 துணை ஆணையர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மீனாட்சி கோயில் தர்க்கார் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணையர் செல்லத் துரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.முன்னதாக தேர்கள் காலை 6 மணிக்கு புறப்படு வதாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தேர் புறப்பட்டபோது, கீழமாசி வீதியில் திடீரென மரம் ஒன்றால் இடையூறு ஏற்பட்டது. இதன் காரணமாக 1.15 நிமிடம் தாமதமாக 7.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் கீழமாசி வீதியிலுள்ள தேரடி பகுதிக்கு வந்தடைந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.