விஜயபுரா : ”காலியாக உள்ள ஐந்து அமைச்சர் பதவிகள் வெகு விரைவில் நிரப்பும் வகையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்,” என, கர்நாடகாவைச் சேர்ந்த, பா.ஜ.,வின், பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது நடக்கும் என்று பதவி எதிர்பார்ப்பவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.முதல்வர் பசவராஜ் பொம்மை டில்லி செல்லும் போதெல்லாம்,
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தான் முக்கியமாக பேசப்படுகிறது.சமீபத்தில் டில்லி சென்ற போது, மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து, கர்நாடகா வரும் போது அறிவுறுத்தப்படும் என்று பா.ஜ., தேசிய தலைவர் நட்டா முதல்வரிடம் கூறியிருந்தார்.அந்த வகையில், பா.ஜ., கூட்டங்களில் பங்கேற்பதற்காக, இன்று விஜயநகராவுக்கு நட்டா வருகை தருகிறார். அப்போது அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அனுமதி தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, விஜயபுராவில் பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நேற்று கூறியதாவது:அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமாவால் கர்நாடக அமைச்சரவையில் ஐந்து பதவிகள் காலியாகி உள்ளன. வெகு விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.யாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதை முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பா.ஜ., மேலிடம் தான் முடிவு செய்வர்.கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் கிடையாது. அவர் திறம்பட செயல்படுகிறார். எனவே முதல்வர் மாற்றம் குறித்த பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement