புதுடெல்லி: இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொராகோடா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-இலங்கை இடையேயான பொருளாதார கூட்டுறவு நிலவரம் குறித்தும் இந்தியாவின் உதவியை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இலங்கையில் சீனா இழந்த செல்வாக்கை மீட்க இந்தியா முயற்சிப்பதால், இலங்கைக்கு மேலும் 200 கோடி அமெரிக்க டாலர் கடன் அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு கடன்களை இப்போது திருப்பிச் செலுத்த போவது இல்லை என இலங்கை அறிவித்திருப்பது கவலை அளித்தாலும், இலங்கைக்கு இந்தியாவால் 200 கோடி டாலர் அளவுக்கு கடன் அளிக்க முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசியான் கிளியரிங் யூனியனுக்கு, இலங்கை செலுத்த வேண்டிய 200 கோடி அமெரிக்க டாலர்கடனை செலுத்துவதிலும் இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இந்த ஆலோசனை குறித்து இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘பொருளாதார திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து சர்வதேச நிதியத்திடம் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் நிதி தேவைக்கு, கைகொடுப்பது, இலங்கைக்கு உதவிய முதல் நாடாக இந்தியா இருக்கும்’’ என தெரிவித்துள்ளது.
சார்க் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதம், இந்தியா 40 கோடி அமெரிக்க டாலர் நிதியதவி அளித்தது. மேலும் ஆசியான் கிளியரிங் யூனியனுக்கு 51.52 கோடி அமெரிக்க டாலர் கடன் செலுத்துவதையும், 2022 மே 6-ம் தேதி வரை ஒத்தி வைத்தது.
இந்தியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய கடனையும் இந்தியா வழங்கியது. மேலும் உணவு, மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை இந்தியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை இந்தியா அளித்துள்ளது.
இந்நிலையில் நிதி நெருக்கடியை சமாளிப்பதில் சர்வதேச நாடுகளின் ஆதரவையை பெற இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து இலங்கை தூதர் மரகோடா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆலோசித்தார். வெளிநாட்டு கடனை நிறுத்திவைக்க இலங்கை அரசு முடிவு செய்தது குறித்தும் அவர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கினார். கடன்களை மாற்றியமைப்பதில், பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அதிகாரிகள் விரும்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு முன்னேற்றத்தை கண்காணிக்க, கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்துவது குறித்து இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாஷிங்டன் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் சர்வதேச நிதிய கூட்டத்துக்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கை அமைச்சக குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.