சீனாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில், ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்பட்டு வருவதால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில்,
ஷாங்காய்
நகரில் மட்டும் 75 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் கோரத் தாண்டவமாடி வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
நான் ஆபத்தானவன்: இம்ரான் கான் பகீர் பேச்சு!
ஷாங்காயில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் கொரோனா தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிப்பதாக சமூக வலைதளங்களில் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒருசிலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே, கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போதைக்கு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படாது என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.