விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் – லீலாவதி தம்பதியின் மகன் டால்வின்ராஜ். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே யோகா பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு, அப்துல்கலாம் வேர்ல்டு ரெக்கார்டு, டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு மற்றும் மாவட்ட அளவில் 37 சாதனைகளும், தமிழ்நாடு அளவில் 17 சாதனைகளும் செய்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 11-ம் தேதி கோவாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டார்.
அதன் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 2-ம் பரிசு பெற்றதுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றார். இந்த வெற்றியின் மூலம், அடுத்த மாதம் நேபாள நாட்டில் நடைபெறவுள்ள உலக அளவிலான யோகா போட்டியில் கலந்துகொள்ள மாணவர் டால்வின்ராஜ் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றிபெற்று வெள்ளிப்பதக்கத்துடன் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய பள்ளி மாணவரை அக்கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க, மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும், சிலம்பப்பயிற்சி மாணவர்கள் சிலம்பம் சுற்றி டால்வின்ராஜை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மாணவர் டால்வின்ராஜ், ”நேபாள நாட்டில் நடைபெற உள்ள யோகா போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பதே எனது லட்சியம்” என்றார் உற்சாகத்துடன்.