மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: மாசி வீதிகளில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

மதுரை :

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக கோவிலின் உள்ளேயே திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது.

ஆனால், இந்த ஆண்டுக்கான விழாவுக்கு வழக்கம்போல் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று இறுதி நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் காலை 6 மணி  அளவில் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

2 ஆண்டுகளுக்கு பின் சித்திரை தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.

இதையும் படிக்கலாம்…
சித்ரா பவுர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.