மூணாறு- -மூணாறில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் ஆகிய தொடர் விடுமுறைகளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பின
.கேரளாவில் தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து சென்றதால் ‘ஆப் சீசன்’ என்ற நிலை மாறி ஆண்டு முழுவதும் பயணிகளின் வருகை 2017 வரை இருந்தது. 2018ல் பெய்த கனமழை ஏற்படுத்திய பேரழிவால் சுற்றுலா ஸ்தம்பித்தது. இதே நிலை 2019லும் நிலவியபோதும் பயணிகள் ஓரளவு வந்து சென்றனர்.
அதன் பிறகு கொரோனாவால் 2020 முதல் முற்றிலுமாக முடங்கிய சுற்றுலா தற்போது புத்துயிர் பெற்று பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.தற்போது தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் ஆகிய தொடர் விடுமுறைகளை முன்னிட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்ததால் தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பின.இன்றும், நாளையும் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலான தங்கும் விடுதிகளில் ஈஸ்டர் அன்று அறைகள் காலி செய்யப்படுவதாகவும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Advertisement