மும்பை: பணமோசடி வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் அம்மாவுக்கு அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் அப்பா சுரேந்திரா கடந்த 2015ம் ஆண்டு ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளர் பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை 2017ம் ஆண்டு 18 சதவிகித வட்டியுடன் திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் கடனை திருப்பிக் கொடுக்காமல் ஷில்பா ஷெட்டியின் அப்பா இறந்துவிட்டார். கொடுத்த கடனை திரும்ப கொடுக்கும்படி ஷில்பா ஷெட்டி மற்றும் அவர் அம்மாவிடம் தொழிலதிபர் கேட்டார். ஆனால், அவர்கள் கொடுக்க முன் வரவில்லை. இதையடுத்து அந்த தொழிலதிபர் ஷில்பா ஷெட்டி, அவர் அம்மா சுனந்தா மற்றும் சகோதரி சமிதா ஷெட்டி ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் ஷில்பாவின் அம்மாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்டை நீதிமன்றம் பிறப்பித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின்போது ஷில்பாவின் அம்மா நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானார். அப்போது தனக்கு எதிரான வாரன்டை ரத்து செய்யக் கோரினார். அதையடுத்து சுனந்தா ஷெட்டிக்கு அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.