மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா : நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

Ilayaraja Compare Modi With Ambedkar : புளுக்ராப்ட் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ள அம்பேத்கர் அன்ட் மோடி என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இசைஞானி இளையாராஜா பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி பயணமும்,  டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் உதவும் என்று கூறியுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா எழுதியுள்ள இந்த முன்னுரையில், டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் தனது அறிவுத்திறன் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போரினால் சமூகத்தில் நினைவுகூறப்படும் ஒரு மாபெரும் மனிதர். அவரது பணியின் மகத்துவம் நமது அரசியலமைப்பின் மூலம் அவர் நம் அனைவருக்கும் உறுதி செய்திருக்கும் உரிமைகள் நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

எல்லா சவால்களையும் கடந்து வெற்றி பெற விரும்பும் பலருக்கும் அவர் ஒரு உத்வேகம். சில வரலாற்று ஆளுமைகள் தங்கள் வாழ்நாளில், பெருமை பெறுகின்றனர். ஆனால் சிலர் விரைவில் மறக்கப்படுகிறார்கள். வேறு சிலர் தங்கள் வாழும் காலத்தில் பெரி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ ஒரு அரிய தலைவர், அவர் தனது காலத்திலேயே சரித்திரம் படைத்தார், அவர் மறைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் அவரது வாழ்க்கை பரவலாக வாசிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், ‘டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் நீர் மற்றும் ஆற்று வழிப்பாதை கொள்கையின் சிற்பி’ என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2016இல் முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்தே இதைப் பற்றி தெரிந்துகொண்டது சிறப்பானது.

இருப்பினும், ஒருவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரது கொள்கைகளை உள்வாங்குவதும், அவரது யோசனைகளை செயல்படுத்துபவர்களை ஊக்குவிப்பதும் அதைவிட முக்கியம். ஒருவரது கற்பனைக்கு வரம்புகள் இல்லை என்றாலும், செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட ஒரு உண்மையான தலைவர் மட்டுமே, தனது அடையாளத்தை விட்டுவிட்டு, தீர்க்கரீதியாகவும் கவனமாகவும் செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.

இந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது.

தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பு. சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது.

சமூக நீதி என்று வரும்போது, பல சட்டங்கள், அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்புகள் மூலமாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஓபிசி ஆணையத்தை அமைத்தது ஆகியவற்றின் மூலமாகவும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வலுப்படுத்தியுள்ளார்.

கழிவறைகள் கட்டுதல், வீடுகள் கட்டுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்குதல் போன்றவற்றின் மூலம் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான பெரிய அளவிலான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இதில் பயன்பெறும் பலர் ஏழைகளிலும் மிக ஏழைகள். சமூக ரீதியாக பின் தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள். வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், நிதித்துறை பங்கேற்பு ஆகியவற்றின் வெற்றிகள் கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன.

சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை பிரதமர் மோடியின் அரசு எடுத்ததாக செய்திகளில் படித்தேன். இந்த நடவடிக்கை பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மேற்படிப்பைத் தொடருவதற்கான சுதந்திரம் அளிக்கும். பெண்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் பணிகள் என்று கூறும்போது, இலவச கேஸ் இணைப்புகள் வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது குறித்த பிரதமரின் செய்தியும் நினைவுக்கு வருகின்றன.

பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச்சட்டம், பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ இயக்கத்தின் மூலமாக மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் உயர்ந்தது ஆகியவற்றின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்.

அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளையும் இந்த நூல் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள்.

இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல. இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்” என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் இந்த முன்னுரை வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள இளையராஜாவின் கருத்துக்கு ஒரு சில ரசிர்கள் நாங்கள் உங்கள் இசையை மதிக்கிறோம். ஆனால் உங்கள் கருத்துக்களை அல்ல என்று கூறி வருகின்றனர்.

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.