கோவை பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும், ‘கோவை விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கோவை விழா கடந்த வாரம் தொடங்கியது. கோவையில் உள்ள பல பெரு நிறுவனங்கள், அரசின் துணையுடன் விழாவை நடத்தி வருகின்றன.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் ‘ஆர்ட் ஸ்ட்ரீட்’, வாலாங்குளத்தில் லேசர் கண்காட்சி, உணவுக்காட்சி, கார் கண்காட்சி என்று ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், கோவை விழா செல்வந்தவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மட்டும் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாலாங்குளத்தில் ஒரு வாரத்துக்கு லேசர் கண்காட்சி நடைபெறுகிறது. ஆனால், நிகழ்ச்சியை நடத்தும் பெரு முதலாளிகளுக்கு வேண்டியப்பட்ட வி.வி.ஐ.பி.கள், ஆட்சியாளர்கள்,
அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமே உள்ளே அமர்ந்து பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. சாதாரண மக்கள் கொட்டும் மழையில் சாலையின் மறுமுனையில் நின்று பார்க்கவே அனுமதிக்கப்படுகின்றனராம்.
இதுகுறித்து கோவை மக்கள் கூறுகையில், “ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் என்று செல்வந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாலாங்குளக்கரை சாலையை முடக்கி வைத்து விடுகின்றனர். அருகே தான் அரசு மருத்துவமனை உள்ளது. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரும் சாலை அது.
தொடக்கத்தில் ஆம்புலன்களையே அனுமதிக்கவில்லை. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஆம்புலன்ஸை மட்டும் அனுமதிக்கின்றனர். இப்போதும் அந்த வழியே அவசரத் தேவைக்காக செல்லும் பொது மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். முதியவர்கள் மாலை வாக்கிங் கூட செல்ல முடிவதில்லை.
குளக்கரையைச் சுற்றி பேரிகார்டுகள் மற்றும் பாதுகாவலர்களை போட்டு வைத்துள்ளனர். வி.வி.ஐ.பிகளுக்கும், இவர்கள் பாஸ் கொடுப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தனியாக நாற்காலிகள் போட்டு லேசர் கண்காட்சியை அருகில் இருந்து பார்க்கலாம்.
பொது மக்களுக்கு அந்த நடைபாதையில் நின்று பார்க்கக் கூட அனுமதி இல்லை. பாஸ் இருந்தால் தான் அனுமதி என்று கூறுகின்றனர். பாஸ் எப்படி, யாரிடம் வாங்க வேண்டும் என்று தகவல் இல்லை. கடந்த சில நாள்களாக கோவையில் மழை பெய்து வருகிறது.
அப்போதும் கூட பொது மக்களுக்கு பாதுகாப்பான இடம் ஒதுக்கப்படுவதில்லை. மழை பெய்தபோது கூட பொது மக்களை சாலைக்கு அந்தப் பக்கம் தான் நிற்க வேண்டும். உள்ளே அனுமதிக்க முடியாது என்று கறார் காட்டுகின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் என்று அனைவரிடமும் கறாராகவே பேசுகின்றனர்.
பொது இடத்தில், பொது மக்களை புறக்கணிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுக்கின்றனர் என தெரியவில்லை. இப்படியொரு முட்டாள்தனமான திட்டத்தை அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது.” என்றனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்.