ஆர்வத்தைப் பல விதங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்
பனிக்கட்டி மீது சிலரால் எப்படி எளிதாக நடக்க முடிகிறது, இதய வால்வு எப்படித் தானாக மூடி மூடித் திறக்கிறது, மனிதர்கள் கொட்டாவி விடக் காரணம் என்ன என்று பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவற்றுக்கு விடை அளிக்க முயன்றவர் லியனார்டோ டாவின்சி. தன் வாழ்க்கை முழுவதும் ஆர்வம் பொங்கப் பல கேள்விகளை எழுப்பி அதற்கு அவர் அளித்த விடைகள் மற்றும் வெளிப்பாடுகள்தான் இன்று பல விதங்களில் நமக்குப் பயன்படுகின்றன.
தனிப்பட்ட விருப்பம் வேறு. தேசத் தொண்டு வேறு!
சைவ உணவை மட்டுமே உட்கொண்டவர் லியனார்டோ டாவின்சி. விலங்குகள் மீது அத்தனை அன்பு கொண்டவர். போரை வெறுத்தவர். என்றாலும் தன் நாட்டுக்காக மிக முன்னேறிய ஆயுதங்களை ஒரு ராணுவப் பொறியாளராக வடிவமைத்துத் தந்தவர்.
சுற்றி நடப்பவற்றை நன்கு கவனியுங்கள்
நான்கு இறக்கைகள் கொண்ட ராட்சத ஈக்கள் எப்படிப் பறக்கின்றன என்பதை கவனித்தார் லியானார்டோ டாவின்சி. தனது இறக்கைகளை எந்தக் கோணத்தில் எந்த வரிசையில் மாறி மாறி அவை அடித்துக் கொள்கின்றன என்பதையும் கவனித்தார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆகாய விமானம் தயாரிக்கப்பட்டால் நாமும் பறப்பது சாத்தியமாகும் என்பதை அவர் அறிந்து கூறினார்.
முயற்சிகள் என்பவை முடிவுறாதவை
நீரோட்டத்தைப் பற்றி 730 விவரங்களைக் கண்டு ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தவர் லியனார்டோ டாவின்சி. ஒரு சதுரத்தை எப்படி வட்டம் ஆக்குவது என்பதற்காக 169 விதங்களில் முயன்றிருக்கிறார். மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் பிற பகுதிகளோடு ஒப்பிட்டு மிக நீண்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றைப் பதிவு செய்திருக்கிறார் (பின்னர் ஒரு குதிரையின் உடலில் அவை எத்தன்மை கொண்டவை என்பதையும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்!)
உங்கள் ரசனைக்கு முன்னுரிமை கொடுங்கள்
மிகவும் பணக்கார மற்றும் அதிகாரமிக்க சீமாட்டிகள் தங்களை வரைந்து கொடுக்க வேண்டும் என்று லியனார்டோ டாவின்சியைக் கெஞ்சி இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவர் வளைந்து கொடுக்கவில்லை. மாறாக ஒரு வியாபாரியின் மனைவியை பார்த்ததும் அவருக்கு ஓவியம் வரையத் தோன்ற அதைச் செயல்படுத்தினார். அந்தப் பெண்மணியின் பெயர் லிசா என்றால் அவர் வரைந்த ஓவியம் எதுவாக இருக்கும் என்பதை உங்களால் யூகித்துவிட முடியும்.