கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50-வது நாளை கடந்துள்ளது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் பெரும் முயற்சி செய்தன.
ஆனால் உக்ரைன் வீரர்கள் எதிர்தாக்குதலால் அந்த நகருக்குள் நுழைய முடியவில்லை.
இதையடுத்து கீவ்வை சுற்றியுள்ள படைகளை குறைத்து ரஷியா, தற்போது கிழக்கு உக்ரைன் பகுதி மற்றும் மரியுபோல் நகரம் மீது கவனம் செலுத்துகிறது. அங்கு தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கருங்கடலில் இருந்து ரஷியாவின் மோஸ்க்வா போர்க் கப்பல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. உடனே கப்பலில் இருந்த சிப்பந்திகள் வெளியேற்றப்பட்டனர்.
ரஷியா போர்க்கப்பல் மீது தங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்தது. ஏவுகணை தாக்குதலால் ரஷிய போர்க் கப்பல் பெருத்த சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கீவ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக பெரிய அளவில் தாக்குதல் ஏதுவும் நடத்தப்படாமல் இருந்தது. ரஷிய போர்க் கப்பல் மீது ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதற்கு பிறகு கீவ்வில் தாக்குதல் நடந்து இருக்கிறது.
கீவ் அருகே சக்தி வாய்ந்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
போர்க் கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக கீவ்வில் மீண்டும் ரஷிய படைகள் தாக்கியுள்ளன. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களில் வான்வழி தாக்குதலை எச்சரிக்கும் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு இருந்தன.
இதற்கிடையே ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த போர்க் கப்பல் துறைமுகத்துக்கு இழுத்து செல்லப்பட்டபோது மூழ்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கீவ்வின் தெற்கு பகுதி, கெர்சன் கிழக்கு கார்கீவ் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட சேதம் விவரம் உடனடியாக தெரியவில்லை.
கீவ்வின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்தன.