உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது 51 நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது வரையில் பிரச்சனை குறைந்தபாடாக இல்லை. இப்பிரச்சனை காரணமாக 4.6 மில்லியன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதே சர்வதேச நாணய நிதியம் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது, உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது வளர்ச்சியினை பாதிப்பதோடு மட்டும் அல்ல, விலைவாசியையும் அதிகரிக்கும். ஏற்கனவே இப்பிரச்சனை காரணமாக பல பிரச்சனைகளை உலக நாடுகள் எதிர்கொண்டு வருகின்றது.
டிவிட்டர் பணயக் கைதியல்ல.. எலான் மஸ்க் அறிவிப்பால் கடுப்பான பராக் அகர்வால்..!
கொரோனாவினால் சீரழிந்த பொருளதாரம்
ஏற்கனவே கொரோனாவின் பிடியில் சிக்கி சீரழிந்த பொருளதாரம், தற்போது மீண்டு வரத் தொடங்கியிருந்தது. இது பெரும் ஆறுதலாக பார்க்கப்பட்ட நிலையில் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனையானது பேரதிர்ச்சியாய் வந்துள்ளது. இந்த பிரச்சனையானது இவ்விரு நாடுகளை மட்டும் அல்ல, உலக நாடுகளுக்கும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
உற்பத்தி பாதிப்பு
சர்வதேச நாணய நிதியம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே முக்கிய உற்பத்தியாளர்கள். அங்கு போரினால் நிலவி வரும் இடையூறு காரணமாக பெரும் பிரச்சனைகள் நிலவி வருகின்றது. இது பல பொருட்களின் உற்பத்தியினை குறைத்துள்ளது. ஏற்கனவே கோதுமை, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களின் விலையானது பலத்த உச்சம் தொட்டுள்ளது.
மெதுவான வளர்ச்சி
குறிப்பாக உலகளாவிய மொத்த கோதுமை ஏற்றுமதியில் உக்ரைன் 30 சதவீதம் பங்கு வகிக்கிறது. இதனால் கோதுமையின் விலையானது பலத்த உச்சம் கண்டுள்ளது.
மொத்தத்தில் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனையானது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை காணலாம். அதே நேரம் பணவீக்கம் என்பது மிக வேகமாக வளர்ந்தும் வருகின்றது. இது மேற்கொண்டு பெரும் சிக்கலாய் மாறலாம்.
வறுமை அதிகரிப்பு
ஏற்கனவே பொருளாதார மந்த நிலை, கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய தடைகள் என பலவற்றினாலும் வளர்ச்சி தடைபட்டிருந்தது. தற்போது உக்ரைன் பிரச்சனை அதனை இன்னும் பெரிதாக்கியுள்ளது. உக்ரைனில் வறுமை விகிதம் நாளொன்றுக்கு 5.50% என உலக வங்கி கணித்துள்ளது. 2021ல் 1.8% ஆக உள்ள நிலையில், 2022ல் 19.8% ஆக அதிகரிக்கும் என கணித்துள்ளது.
கடும் பாதிப்பு
மேலும் இப்போரானது இப்போதைக்கு முடியும் பாடாக இல்லை. இது இன்னும் நீடிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது ஏறக்குறைய 30% மக்களை வறுமைக்குள் தள்ளலாம் என கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியமும் இது குறித்த கவலையை எழுப்பியுள்ளது. உணவு பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் விலை அதிகரிப்பானது, ஆப்பிரிக்கா முதல் மத்திய ஆசியா வரையில் பிரச்சனையை தூண்டலாம்.
எல்லாம் முடக்கம்
உக்ரைனில் நிலவி வரும் பிரச்சனையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது, வயல்வெளிகள், கடைகள், வீடுகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உற்பத்தி என அனைத்தையும் சீர்குலைத்துள்ளது. கருங்கடல் பகுதியிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்த பகுதியில் இருந்து தான் 90% தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கிடையில் சமூக பாதுகாப்பின்மை, வேலையிழப்பு, வருவாய் இழப்பு, சரிவர செயல்படாத அரசு, என பலவும் மக்களை இன்னும் வதைக்கலாம்.
ஆசிய நாடுகளுக்கு என்ன பிரச்சனை
ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் உணவு பொருட்கள் விலையானது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது. எனினும் எரிபொருள் விலை, உரங்கள் என பலவற்றிலும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மானியங்களை குறைக்கலாம். குறிப்பாக அதிக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளில் நிதி பற்றாக்குறையை தூண்டலாம். பணவீக்க அழுத்தம் அதிகரிக்கலாம்.
தேவை அதிகரிப்பு
சர்வதே எரிசக்தி மையம் உலகளாவிய பொருளாதார மீட்சியுடன் இணைந்த தேவையானது மீண்டு வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக போருக்கு முன்னரே உலகளாவிய அளவில் எண்ணெய் விலை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. இந்த சமயத்தில் ஓபெக் நாடுகள் உற்பத்தியினை குறைவாகவே வைத்திருந்தன. இதற்கிடையில் தான் விலையை துரிதப்படுத்தும் விதமாக போரும் வந்தது.
பொருட்களின் விலை அதிகரிக்கலாம்
அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு மத்தியில் சப்ளை சங்கியிலும் பாதிப்பு அதிகமாக இருக்கலாம். இந்த இடையூறுகள், தடைகள் பொருட்களின் விலையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். உற்பத்தியாளர்களுக்கும் உற்பத்தி செலவினங்களை அதிகரிக்க தூண்டலாம். மொத்தத்தில் விலைவாசி என்பது அதிகரிக்க இது காரணமாக அமையலாம்.
போக்குவரத்து சீர்குலைப்பு
ரஷ்யாவும் உக்ரைனும் இணைந்தும் கூட மொத்த ஏற்றுமதியில் 3% மும், இறக்குமதியில் 2% தானே பங்கு வகிக்கின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் இதனால் என்ன பெரிய பிரச்சனை இருந்து விட போகிறது என்ற கேள்வி எழலாம். இப்பிரச்சனை இதோடு முடிந்து விட்டால் பரவாயில்லை. அடுத்தடுத்த மோதல்கள், போக்குவரத்து தடை, போக்குவரத்து வழிகள் சீர்குலைப்பு, விமான சரக்கு போக்கு வரத்து, கப்பல் போக்குவரத்து என பலவற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது இன்சூரன்ஸ் பிரீமிய செலவுகளையும் அதிகரித்துள்ளது.
வணிகங்கள் பிரச்சனை
ஆக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது அவ்விரு நாடுகளை மட்டும் அல்ல, அவ்விரு நாடுகளின் வழியாக செயல்படும் ஒட்டுமொத்த வணிகத்தினையும் சீர்குலைத்துள்ளது. இது சர்வதேச அளவிலான சுற்றுலாவினையும் பாதிக்கும். கொரோனாவில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ள பொருளாதாரம், மீண்டும் பலவீனமான வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.
கடன் பிரச்சனை
வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மை பிரச்சனையாக இருப்பது கடன் மற்றும் நிதி நெருக்கடி தான். உலக வங்கி முன்னதாக வளர்ந்து வரும் சந்தைகளில் அதிக கடன் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40% பங்கு வகிக்கும் இந்த நாடுகள், மேலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனாவினால் சரிந்த பொருளாதாரத்தினை மேம்படுத்தவே கடும் முயற்சி எடுத்து வந்தன.
தற்போது இந்த போரானது உலகளாவிய வளரும் நாடுகளுக்கு இன்னும் பிரச்சனையை கொடுத்துள்ளது. பணவீக்கத்தினால் தத்தளிக்கும் நாடுகள் மேலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
What are the challenges facing the world due to the Russia-Ukraine crisis?
What are the challenges facing the world due to the Russia-Ukraine crisis?/ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை.. உலக நாடுகளுக்கு காத்திருக்கும் சவால்கள்..!