ராமர் கடவுளே அல்ல என்றும், ராமாயணத்தில் ராமர் ஒரு கதாபாத்திரம் என்றும், பாஜக கூட்டணி கட்சியான ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மஞ்சி கருத்துத் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார்
மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில், முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜிதன்ராம் மஞ்சி பேசியதாவது:
நான் ராமரை நம்பவில்லை. ராமர் கடவுளே இல்லை. துளசிதாஸ் மற்றும் வால்மீகி அவர்களின் செய்தியை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம், ராமர். அவர்கள் ராமாயணத்தை எழுதினார்கள். அவர்களின் எழுத்துக்களில் பல நல்ல பாடங்கள் உள்ளன. அதை நாங்கள் நம்புகிறோம். துளசிதாஸ் மற்றும் வால்மீகியை நம்புகிறோம். ஆனால் ராமரை அல்ல. இந்த உலகத்தில் இரண்டு ஜாதிகள் தான் இருக்கின்றன. பணக்காரர் மற்றும் ஏழை. தலித்துகளுக்கு எதிராக பிராமணர்கள் பாகுபாடு காட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டு, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மஞ்சி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.