ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் புதியதாக ஆறு இடங்களில் அரிசி ஆலைகள் நிறுவப்படவுள்ளதாகவும், இதனையடுத்து நியாய விலைக் கடைகளில் பாக்கெட்களில் அரிசி விநியோகம் தொடங்கும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பழனிக்கவுண்டன்புதூர், தும்மிச்சம்பட்டி சத்யா நகர் மற்றும் காந்திநகரில் முழுநேர நியாய விலைக் கடைகளை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியது: “தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 11 மாதங்களில், குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்திருந்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு இதுவரை 11 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் தாலுகாவில் மட்டும் 3,919 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளளன.
தமிழகத்தில் 5,100 நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக இந்தக் கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புதிய நியாய விலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்கள் 12 லட்சம் பேரின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் குடும்ப அட்டைகள் தகுதியில்லாதவை என கண்டறியப்பட்டு அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொதுவிநியோகத்திட்டத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆறு இடங்களில் அரிசி ஆலைகள் நிறுவப்படவுள்ளன. அதன் பின்னர் நியாய விலைக் கடைகளில் பாக்கெட்களில் அரிசி விநியோகம் செய்யப்படும்” என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம் பி வேலுச்சாமி, கூட்டுறவு துணைப்பதிவாளர் முத்துக்குமார், ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.