டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை வாங்கினார். இதையடுத்து ட்விட்டரின் மொத்த பங்குகளையும் 43 பில்லியனுக்கு வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை தான் ட்விட்டரை வாங்கும் பட்சத்தில் அதில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய விரும்புவதாக, TED நிகழ்ச்சியில் நடைபெற்ற நேர்காணலில் தெரிவித்தார் எலாம் மஸ்க். அதில், ‘அதிகபட்ச நம்பகமான மற்றும் பரந்த அளவிலான ஒரு பொது தளத்தை வைத்திருப்பது நாகரிகத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியம். மக்கள் வெளிப்படையாகப் பேச, அனைத்தையும் உள்ளடக்கிய இடம் மிகவும் தேவைப்படுகிறது. உண்மை, மக்களின் கண்ணோட்டம் இரண்டுமே முக்கியம். பயனர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சமூக ஊடக தளமான ட்விட்டர் செயல்பட படவேண்டும். பிரச்னைக்குரிய ட்விட்டர் பயனர்களின் கணக்குகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படாமல், தற்காலிகத் தடை விதிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
மேலும், ‘பிளாக் பாக்ஸ்’ என்ற ட்விட்டரின் ஊட்டத்தை இயக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை செயல்படுத்த விரும்புவதாகவும், இதனால் சில ட்வீட்கள் ஏன் வைரலாகிறது, மற்றவை ஏன் ஆகவில்லை என மக்கள் வெளிப்படைத் தன்மையோடு அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
‘நான் நம்புகிற ஒரு விஷயம், ட்விட்டர் காப்புரிமை அற்ற எளிதாக அணுகக்கூடிய அல்காரிதத்தில் செயல்படும் ஓபன்-சோர்ஸ் (open-source) ஆக மாற வேண்டும். மக்களின் ட்வீட்களில் மாற்றம் செய்ய அந்த செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். ட்வீட்டை விளம்பரப்படுத்த, தரமிறக்க அல்லது வேறுவிதமாகப் பயன்படுத்த ஏதாவது செய்யப்பட்டதா என்பது பயனர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும். ட்விட்டரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாதபட்சத்தில், ட்விட்டரின் பங்குதாரராக இருப்பதா வேண்டாமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்’ என்றுள்ளார்.
ட்விட்டர் உரிமையின் மீது ஆர்வமாக இருக்கும் எலான் மஸ்க்கின் ஆஃபர் ஒட்டுமொத்த சமூக தளங்களையும் அதிரச் செய்துள்ளது.