வைகை ஆற்றில் எழுந்தருள மதுரைக்குள் வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விளக்குகள் ஏந்தியும் மலர் தூவியும் வரவேற்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான உற்சாகத்தோடு இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று திருக்கல்யாண நிகழ்வும் இன்று தேரோட்ட நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது,
இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை காலை நடைபெற உள்ள நிலையில், அதற்காக அழகர் மலையிலிருந்து நேற்று மாலை கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.
இதையடுத்து தங்க ஆபரண அலங்காரத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகரை வழிநெடுகிலும் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்று வழிப்பட்டனர், இதைத் தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, காதக்கிணறு கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் இன்று காலை மதுரை மாநகரின் நுழைவாயிலான மூன்றுமாவடி வந்தடைந்தார்.
மூன்றுமாவடி வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி கைகளில் விளக்குகளை ஏந்தியும், பூக்கள் தூவியும் தற்பொழுது மதுரைக்குள் வந்த கள்ளழகரை மக்கள் எதிர்சேவை அளித்து வழிபட்டனர். அழகர் கோவில் முதல் மதுரை வண்டியூர் வரை 464 மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் இன்று மாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் எதிர்சேவை செய்து அங்கு தங்கி அருள்புரிய உள்ளார்.
இதையடுத்து அங்கு, அழகர் கோயிலில் இருந்து தலைச்சுமையாக கொண்டு வரப்பட்ட நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் நிகழ்வு நடைபெறும். இதைத் தொடர்ந்து நாளை காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருள்வார்.
இந்த நிகழ்விற்காக மதுரை மக்கள் இரண்டு ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மதுரை வந்தடைந்த கள்ளழகரை மக்கள் உற்சாகமாக வரவேற்று வழிபட்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM