திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவத்தின் 2ம் நாளான நேற்று சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஏழுமலையானை வெயிலின் தாக்கத்திலிருந்து குளிர்விப்பதற்காக வருடாந்திர வசந்த உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வசந்த உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 2 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள வசந்த மண்டபத்திற்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஊர்வலமாக சென்றனர். அங்கு ஜீயர்கள் முன்னிலையில் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், மூலிகை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து 2ம் நாளான நேற்று காலை ஏழுமலையான், தங்கரதத்தில் வசந்த மண்டபத்திற்குள் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3ம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், சீதா லட்சுமண சமேத கோதண்டராம சுவாமி, ஆஞ்சநேயர், ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் மத்தியில் நடைபெற்று வந்த வசந்த உற்சவம் 2 ஆண்டுகளாக கல்யாண மண்டபத்தில் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் வசந்த உற்சவம் பக்தர்கள் பங்கேற்ற வகையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.15 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்புநேற்று முன்தினம் தமிழ்புத்தாண்டு, நேற்று புனிதவெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளது. இவர்கள் சுமார் 10 மணி முதல் 15 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 மற்றும் சேவை டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.ரூ.5.11 கோடி உண்டியல் காணிக்கைதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 82 ஆயிரத்து 722 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இவர்களில் 33,678 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். மேலும், கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் நேற்று முன்தினம் ஒரேநாளில் உண்டியலில் ரூ.5.11 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.