டெல்லி : டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது 4-வது அலை தொடங்கியதற்கான அறிகுறியா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.நாட்டின் தலைநகர் டெல்லியில், கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்து வந்தது. இதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் நான்காவது அலை வரக்கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது அலை தொடங்கியது போது டெல்லியில் தான் முதன் முதலில் அதிகமான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. டெல்லியில் நேற்று புதிதாக 299 பேருக்கு தொற்று உறுதியானது. முந்தைய நாளை விட இது 50 சதவீதம் அதிகமாகும். மேலும் இது கடந்த 40 நாட்களில் பதிவாகாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். அத்துடன் டெல்லியில், கடந்த ஒரு வாரத்தில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.5 சதவீதத்தில் இருந்து 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா பரவல் எண்ணிக்கையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எக்ஸ்.இ. வகை புதிய மாறுபாடு கண்டறியப்படும் வரை பரவலை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் டெல்லி சுகாதார அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.