Arun Pandian slams Ajith and Vijay for high salary issue: நடிகர் அஜித் மற்றும் விஜய் பெரிய தொகையை சம்பளமாக வாங்குவதால் படத்தின் தரம் குறைவாக உள்ளதாக நடிகர் அருண் பாண்டியன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதார்’. இந்தப்படத்தை இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கருணாஸ் உடன் இனியா, ரித்விகா, அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா, பூச்சி முருகன், அமீர், இரா.சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் இரா.சரவணன், தமிழ் சினிமாவுக்கு தற்போது பொற்காலம் என்று கூறினார். பின்னர் பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் இந்த கருத்தை மறுத்து பேசினார்.
அருண் பாண்டியன் பேசுகையில், ”தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை, நாங்கள் நடித்த காலம் தான் உண்மையான பொற்காலம். இப்போது வேற்று மொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கிறது.
இதையும் படியுங்கள்: இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் தென்னிந்திய திரைப்படங்கள்; காரணம் என்ன?
மேலும், விஜய், அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால், படத்தின் தரம் குறைவாக உள்ளது. பட்ஜெட்டில் 90% சம்பளத்திற்கு போய் விடுவதால், 10% தான் படத்திற்கு செலவு செய்யப்படுகிறது. இதனாலேயே தமிழ் சினிமா, பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் அவர்கள் சம்பளமாக வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும்? கண்டிப்பாக எடுக்க முடியாது. அதனால் இந்த மேடையை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும் போது, 10 சதவீதம் தான் சம்பளத்திற்கு வரும். 90 சதவீதம் படத்திற்கு போகும். அப்படி இருந்தால் தான் நாம் பிறமொழி படங்களுடன் தமிழ் படங்களை ஒப்பீட்டு பார்க்க முடியும் என்று அருண் பாண்டியன் பேசினார்.
அருண் பாண்டியனின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், தமிழ் சினிமாவில் தற்போது தான் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகின்றன. அதோடு, விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளையும், அவர்களுக்கான அரசியலையும் பேசும் படங்கள் இப்போது தான் வெளியாகி வருகின்றன. எனவே தமிழ் சினிமா நல்ல நிலையிலே உள்ளதாக நெட்டிசன்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.