டெல்லி: அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பில் உள்ள பாபு கேசவானந்த் ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டிருந்த 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். நாடு முழுவதும் 4 திசைகளில் அமைக்கப்படவிருக்கும் 4 சிலைகளில் இது 2 வது சிலையாகும். இந்த சிலை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் கடந்த 2018 ம் ஆண்டு துவங்கப்பட்டது. முதலாவது சிலை ஏற்கனவே இந்தியாவின் வடக்கு பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு சிம்லாவில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. 3வது சிலையானது தெற்கே தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் நிறுவும் பணி தொடங்கியிருக்கிறது. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3வது சிலை அமைக்கப்படுகிறது. ஒரு தனியார் அறக்கட்டளை மூலமாகவே இந்தியாவின் 4 திசைகளிலும் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 4வது சிலை மேற்குவங்கத்தில் நிறுவப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இதேபோன்ற மிகப்பெரிய ஹனுமன் சிலையை சிம்லாவில் பார்த்துள்ளோம். தற்போது, இரண்டாவது சிலை மோர்பியில் நிறுவப்பட்டுள்ளது. அனைவரின் முயற்சிக்கும் சிறந்த ஆற்றலாக ராமர் வாழ்க்கை உள்ளது; அதிலும் அனுமன் மிக முக்கிய நபராக திகழ்ந்தவர் என தெரிவித்து நாட்டு மக்களுக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து கூறினார். அனுமனை போன்று அனைவரும் எடுத்த காரியத்தில் முயற்சியாக இருக்க வேண்டும் எனவும் தனது வார்த்தையின் போது குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்னும் 2 சிலைகள் திறக்கப்படுவதை தான் ஆர்வத்துடன் நோக்கி இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். அனுமன் சிலையை உருவாக்குவது தீர்மானம் மட்டும் அல்ல. ஒரே பாரதம் சிறந்த பாரதம் என்பதில் ஒரு அங்கமாகும் என பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வலிமை, தைரியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் அடையாளமாக திகழும் அனுமனின் பிறந்த நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். அனைவரின் வாழ்வும் புத்திசாலித்தனம், வலிமை மற்றும் அறிவு மிகுந்ததாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு ட்வீட்டில், “இன்று அனுமன் ஜெயந்தி. மோர்பியில் அனுமன் சிலையை காணொலி மூலமாக திறந்துவைக்கிறேன். இதற்காக பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.