“அரசுக்கு எதிராகப் போராட்டம்… அரசியல் பயணம்" – சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக-வின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்லும் நேரத்தில் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்துச் சென்றார். அடுத்ததாகக் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் பதவிகள் நீக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டுவரப்பட்டது.

சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி

கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது செல்லாது என்று சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதே சமயத்தில் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யபட்டிந்தது. அந்த வழக்கில், சசிகலாவை `அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும்’ என்று சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பை அதிமுக தரப்பினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த தீர்ப்பு தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சசிகலா, “நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். அரசியல் ரீதியாக எப்படி வேண்டுமென்றாலும், எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். எனது அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது” என்று பேசினார்

இது தொடர்பாக, சசிகலாவின் ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதனிடம் பேசினோம். “சின்னம்மா விரைவிலேயே 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அந்த பயணத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஒரு பக்கமிருக்க மாநில அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சற்று குறைக்கலாம். விலைவாசி உயர்வையும் இந்த திமுக அரசு கட்டுப்படுத்த தவறவிட்டது.

ஆவின் வைத்தியநாதன்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தச் சின்னம்மா தயாராகி வருகிறார். விரைவிலேயே வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும். அதேசமயத்தில், மண்டலங்கள் தோறும் போராட்டம் நடைபெறும். மேலும், அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்த அரசியல் பயணம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆன்மிக பயணத்திலேயே சின்னம்மாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த அரசியல் பயணத்தின் மூலம் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நடைபெறுவதை நீங்கள் கூடிய விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று பேசினார்.

சசிகலா அரசியல் பயணத்தை தொடங்குவாரா என்பதையும், அந்த பயணத்தில் என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.