“இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்…" – சீனாவுக்கு ராஜ்நாத் சிங் சொல்லும் செய்தி

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற இந்தியா -அமெரிக்கா அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹவாயில் உள்ள அமெரிக்க ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பான IndoPACOM தலைமையகத்திற்குச் சென்றார்.

அதைத்தொடர்ந்து, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங், இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் நடந்த தாக்குதல் பற்றி பேசியபோது, “இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள், நாங்கள் எந்த மாதிரியான முடிவுகள் எடுத்தோம் என்பதையெல்லாம், என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால், இந்தியாவுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், இந்தியா யாரையும் விட்டுவைக்காது என்ற செய்தி மட்டும், சீனாவுக்குச் சென்றுள்ளது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என கூறினார்.

இந்தியா – சீனா

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியா ஒரு நாட்டுடன் நல்லுறவில் இருப்பதால், பிற நாட்டுடனான இந்தியாவின் உறவு மோசமடையும் என்று அர்த்தமல்ல. இதுபோன்றவற்றை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதுமில்லை. அதை ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை. இந்த மாதிரியான சர்வதேச உறவுகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவென்பது, இருதரப்புக்கும் வெற்றி என்ற அடிப்படையில் இருப்பதையே இந்தியா விரும்புகிறது” எனக் கூறினார்.

கடந்த 2020, மே 5-ல், லடாக் எல்லைப்பகுதியில், இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினருக்கு இடையே தாக்குதல் நடந்தது. அதைத்தொடர்ந்து ஜூன் 15-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டுப்படையினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இத்தகைய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததும், பின்னர் இப்பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினரும் ராணுவப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.