புதுடெல்லி: இந்தியா, பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளிடையிலான 20-வது ஆண்டு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் போது 2 நாடுகளிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்தியா, பிரான்ஸ் ராணுவ உயர் அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த 12, 13-ம் தேதிகளில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த இந்தியா-பிரான்ஸ் கூட்டு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நட்பு ரீதியிலும், சுமுகமான சூழ்நிலையிலும் 2 நாடுகள் இடையிலான இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2 நாடுகளிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், புதிய முயற்சிகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு ஈடுபாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து இந்த பேச்சுவார்த்தையில் உதவி தலைமை ராணுவ தளபதியும் (ராணுவ ஒத்துழைப்பு), ஒருங்கிணைந்த ராணுவப் பணியாளர்கள் பிரிவின் ஏர்வைஸ் மார்ஷலுமான பி.மணிகண்டன், பிரான்ஸ் தரப்பில் அந்நாட்டைச் சேர்ந்த ராணுவ தலைமையிடத்தின் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பு தெற்கு, பணியாளர்கள் பிரிவின் பிரிகேடியர் ஜெனரல் எரிக் பெல்டியர் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த பிப்ரவரியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று திரும்பினார். அதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியாவும் பிரான்ஸும் கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தில் உயர்நிலை பேச்சுவார்த்தையைத் தொடர்கின்றன. இதன்மூலம் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பு அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டுப் பேச்சுவார்த்தையானது கடல்சார் பாதுகாப்புக்கான இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.