இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்

கொழும்பு, 
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது.

12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது.
எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன.
இதை கருத்தில்கொண்டு, வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாங்க இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கழகம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, இருசக்கர வாகனங்கள் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ஒருதடவை வரும்போது ரூ.1,000 வரை எரிபொருள் வாங்கலாம்.
ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள், ரூ.1,500 வரை எரிபொருள் வாங்கிக் கொள்ளலாம். கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ரூ.5 ஆயிரம் வரை வாங்கலாம்.
பஸ், லாரி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த உச்சவரம்பு நேற்று அமலுக்கு வந்தது.
எரிபொருள் வாங்க இலங்கைக்கு இந்தியா கடந்த மாதம் 50 கோடி டாலர் கடன் அளித்தது. மேலும், 50 கோடி டாலர் கடன் கேட்டு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிலோன் பெட்ரோலியம் கழக தலைவர் சுமித் விஜேசிங்கே தெரிவித்துள்ளார்.
மானியத்துடன் விற்பதால், டீசல் விற்பனை மூலம் லிட்டருக்கு ரூ.110-ம், பெட்ரோல் விற்பனை மூலம் லிட்டருக்கு ரூ.52-ம் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக அவர் கூறினார். நாள்தோறும் ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.