ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தின் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நீலாவதி (வயது 44). தனது குடும்பத்தினருடன் சூரம்பட்டி வலசு, காந்திஜி வீதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி நீலாவதி பணியில் இருந்த போது, காதல் கலப்பு திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து, இருவீட்டு பெற்றோர்களையும் வரவழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில், அந்த பெண் தனது காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் , அவருடன் இன்ஸ்பெக்டர் நீலாவதி அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே, அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பெண்ணை கடத்திச் சென்ற புகாரின்பேரில் சூரம்பட்டி போலீசார், பெண்ணின் பெற்றோர் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது, தன்னை பெற்றோர் கடத்தவில்லை, தனது விருப்பத்தின் பேரில்தான் அவர்களுடன் சென்றேன். இப்போதும் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக அந்தப் பெண் கூறினார். இதனையடுத்து அந்த பெண் நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்ஸ்பெக்டர் நீலாவதியை உயர் அதிகாரி ஒருவர் வாக்கி டாக்கியில் கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நீலாவதி, உயர்அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டும், குறுஞ்செய்தி மூலமும் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்து விட்டு மயங்கி விழுந்தார்.
ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நீலாவதி நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். நேற்று நீலாவதி பேசிய ஆடியோ அந்த சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீலாவதி மற்றும் உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு மீது என இருதரப்பிலும் புகார் வந்துள்ளதால், டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.