ஜபல்பூர்:
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பெண் ஒருவர் உணவு டெலிவரி ஏஜெண்டை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெலிவரி ஏஜெண்டின் பைக் தனது ஸ்கூட்டி மீது மோதியதால் காயமடைந்ததாகவும், அதனால் அவரை தாக்கியதாகவும் கூறி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், டெலிவரி ஏஜெண்டை பெண் தனது செருப்பால் அடிப்பது பதிவாகி உள்ளது. சுற்றியிருந்தவர்கள் நிறுத்தும்படி கூறியும் கேட்காமல் பெண் மாறி மாறி தாக்குகிறார்.
அந்த பெண் ஸ்கூட்டியில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். பைக் ஓட்டி வந்த டெலிவரி ஏஜெண்ட் சாலையின் தவறான பக்கத்தில் சென்றதாக ஒரு சிலர் சுட்டிக்காட்டினர். தவறான பாதையில் டெலிவரி ஏஜெண்ட் வந்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்ட பலர், அந்த பெண் சூழ்நிலையை கையாண்ட விதத்தை கண்டித்துள்ளனர். அவர் அவமதிக்கப்பட்ட விதத்தை நியாயப்படுத்த முடியாது என்றும், அந்தப் பெண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் கூறி உள்ளனர்.