நியூயார்க்: அமெரிக்காவில் முகாமிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸை நியூயார்க்கில் நேற்று சந்தித்தார்.
அப்போது உக்ரைன் போர் குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். போர் காரணமாக உக்ரைனில் உணவு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டுக்கு உணவு, எரிபொருள் விநியோகம் செய்வது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்தும் ஜெய்சங்கரும் அந்தோனியோ குத்தேரஸும் விவாதித்தனர். மியான்மரில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்தும் இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன். குறிப்பாக உக்ரைன் போரால் சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உக்ரைனில் ஏற்பட்டுள்ள உணவு, எரிபொருள் தட்டுப்பாடு, வளரும் நாடுகளின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு பாராட்டு
அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, “எந்தவொரு சவாலையும் இந்தியா எதிர்கொள்ளும் விதம் பாராட்டும் வகையில் உள்ளது. இந்தியாவோடு இணைந்து பணியாற்ற ஐ.நா. சபை எப்போதும் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.