குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி:

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேசவானந்த் ஆசிர மத்தில் 108 அடி உயர பிரமாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

நாட்டின் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது சிலை வடக்கு பகுதியான சிம்லாவில் 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தெற்கே ராமேசுவரத்தில் சிலை நிறுவும் பணி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியுடன் சமீபத்தில் தொடங்கியது.

2-வது அனுமன் சிலை குஜராத் மாநிலம் மோர்பி நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மேற்கு திசையில் நிறுவப்பட்டுள்ளது. 108 அடி உயரம் கொண்ட இந்த சிலையை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத்தில் உள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அப்போது மோடி பேசியதாவது:-

உங்கள் அனைவருக்கும், நாட்டு மக்களுக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் அனுமனின் இந்த பிரமாண்ட சிலை இன்று மோர்பியில் திறக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

அனுமன் அனைவரையும் தனது பக்தியால், தனது சேவையால் இணைக்கிறார். அனைவரும் உத்வேகம் பெறுகிறார்கள்.

மொழி-பேச்சு வழக்கு ஏதுவாக இருந்தாலும் அனுமனின் ஆன்மா அனைவரையும் ஒன்றிணைக்கிறது. கடவுஸ் பக்தியுடன் ஒன்றுபடுகிறது. இதுவே இந்திய நம்பிக்கையின் பலம் நமது ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகும்.

அனுமன் சிலை மேற்கு வங்காள மாநிலத்திலும் அமைக்கப்படும்.

இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக அனுமன் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வலிமை, தைரியம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடையாளமான பகவான் அனுமன் பிறந்தநாளில் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனுமனின் அருளால் அனைவரின் வாழ்வும், வலிமை, புத்திசாலித்தனம், அறிவால் நிறையட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்… மேடை மீது விழுந்த இரும்பு கம்பி- உயிர் தப்பிய மத்திய மந்திரி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.