புதுடெல்லி: கொரோனாவால் சம்பளம் குறைக்கப்பட்ட நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் படிப்படியாக பழைய சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால், உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டு, விமான நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தன. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், விமான சேவைகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தனது ஊழியர்களுக்கு பழைய சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா விடுத்துள்ள அறிக்கையில், ‘கொரோனாவால் விமானிகளுக்கான அலவன்ஸ், சிறப்பு ஊதியம் மற்றும் பெரிய விமானங்களை இயக்குவதற்கான அலவன்ஸ் முறையே 35, 40, 40 சதவீதம் குறைக்கப்பட்டது. இது தற்போது 20, 25, 25 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. விமானப் பணியாளர்களுக்கான அலவலன்ஸ், சிறப்பு ஊதியம் ஆகியவை முறையே 15, 20 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில், அவை 10, 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. 50 சதவீதம் குறைக்கப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளுக்கான அலவன்ஸ் தற்போது 25 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. 30 சதவீதமாக குறைக்கப்பட்ட பிற ஊழியர்களுக்கான அலவன்ஸ், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.முக்கிய நிர்வாகிகள் மாற்றம்ஏர் இந்தியா தலைவரான என்.சந்திரசேகரன், நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி உள்ளார். தலைமை வர்த்தகப்பிரிவு அதிகாரியாக நிபுன் அகர்வால், தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரியாக சுரேஷ் தத் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பொறுப்புகளை வகித்த மீனாட்சி மாலிக், அம்ரிதா சரண் ஆகியோர் நிறுவன தலைமை செயல் அதிகாரியின் (சிஇஓ) ஆலோசகர்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை சிஇஓ நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.