திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று (சனிக்கிழமை) கிரிவலம் சென்றனர்.
‘பார்வதி தேவி வரைந்த குழந்தையின் சித்திரம் மிக தத்ரூபமாக இருந்தது. சிவபெருமான் அந்த சித்திரத்தின் மீது தனது மூச்சுக் காற்றை படரச் செய்து சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். உயிர் பெற்ற குழந்தை தவழ்ந்ததைப் பார்த்து பார்வதி தேவியும் மகிழ்ந்தார். சித்திரத்தால் உருவானதால், அக்குழந்தை சித்திரகுப்தன் என அழைக்கப்பட்டார். அவ்வாறு சித்திர குப்தன்பிறந்த நாள் தான், சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி திதி. பின்னர் அந்தக்குழந்தை பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தனாக பிரம்மாவால் நியமிக்கப்பட்டார்’ – இதுவே சித்ரா பவுர்ணமி உருவான வரலாறு என புராணங்கள் கூறுகிறன.
இத்தகைய சிறப்பு பெற்ற சித்ரா பவுர்ணமி விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (சனிக்கிழமை) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சன்னதி எதிரே உள்ள சித்திர குப்தன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர், சித்திர குப்தனையும் வழிபட்டனர். இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்ள் அனுமதிக்கப்படுகின்றனர். சித்திராபவுர்ணமியை ஒட்டி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். அவர்கள், சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர். வழக்கம்போல் விஐபிக்கள் வருகையும், அவர்களை உபசரிக்கவும் பிரத்யேக குழு தீவிரமாக செயல்பட்டது.
சித்ரா பவுர்ணமியன்று, மலையே மகேசன் என போற்றப்படும் 14 கி.மீ., தொலைவுள்ள அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். பக்தர்களின் கிரிவலம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று இறைவனை வழிபட்டனர். அப்போது அவர்கள், ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படி செல்கின்றனர். மேலும், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலை மற்றும் அஷ்ட லிங்கங்கள் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
கரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பக்தர்களின் வருகையும் அதிகளவில் இருந்தது. 40 இடங்களில் ஆன்மிக பற்றாளர்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரம் மற்றும் கிரிவல பாதையில் துப்புரவு பணியை தூய்மை பணியாளர்கள் இடைவிடாமல் மேற்கொண்டனர். பக்தர்களின் வசிதிக்காக 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.