சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் சேர்ந்து அந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு செல்வது தெரியவந்தது. அனால் அவர்களின் முக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து அந்த நபர்கள் யார் என்று மற்றொரு சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது, அந்த காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
சதீஷ்குமார் கார் மீது பெட்ரோல் ஊற்ற, அவரின் மகள் ஓடிவந்த அதனை தடுப்பது அந்த சிசிடிவி பதிவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சதீஷ்குமார் காரை தீயிட்டுக் கொளுத்தியது உறுதியானது.
மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, சதீஷ்குமாரின் மனைவி தனக்கு நகை வேண்டும் என்று அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், காரை விற்பனை செய்துவிட்டு எனக்கு அந்த காசில் நகை வாங்கித் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சதீஷ்குமார் ஆத்திரத்தில் காருக்கு தீ வைத்து எரித்தது தெரியவந்துள்ளது.
சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் சதீஷ்குமாருக்கு எச்சரிக்கை விடுத்து அவரின் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.