பஞ்சாப் மாநிலத்தில், வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல், அனைத்து குடும்பங்களுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்து உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, அனைத்து குடும்பங்களுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என, ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.
இதை அடுத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், அண்மையில் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஏப்ரல் 16 ஆம் தேதி (இன்று) மிகப் பெரிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவு பெறும் நிலையில், அக்கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல், அனைத்து குடும்பங்களுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், கடந்த மாதம் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது
இலவச மின்சாரம்
திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கூறியதாவது:
வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல், மாநிலத்தில் அனைத்து குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். முன்னர் சுதந்திர போராட்ட வீரர்கள் குடும்பத்தினர், வறுமை கோட்டிற்கு கீழ் வசித்தவர்கள் மட்டும் 200 யூனிட் இலவச மின்சாரம் பெற்றனர். தற்போது அவர்களும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெறுவார்கள். கடந்த 2021 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை 2 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தியவர்களின் கட்டணங்களை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. பலர் வதந்திகளை பரப்பினர். அவர்களுக்கு உண்மை தெரியும். விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவது தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.