சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பக்வந்த் மான் முதல்வரானார். இந்நிலையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்து ஒருமாதம் நிறைவடைந்துள்ளது.
முன்னதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடந்த செவ்வாய்க் கிழமை பதிவு செய்த ட்வீட்டில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் சிறப்பான சந்திப்பு அமைந்தது. சீக்கிரமே பஞ்சாப் மாநில மக்கள் நற்செய்தி கொல்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி தற்போது மக்களுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி மிக முக்கியமான வாக்குறுதியாக 300 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்தது. அதேபோல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் என்ற திட்டத்தையும் அறிவித்தது. அத்திட்டம் பகவந்த் மான் பொறுப்பேற்றவுடனேயே செயல்பாட்டுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 19ல், கேபினட் கூட்டத்தின் முதல் முடிவாக 25,000 பேருக்கு அரசு வேலை வாய்ப்புகள் அறிவிப்பு வெளியானது. அதில் 10,000 வேலைவாய்ப்பு காவல்துறை சார்ந்தது.
காங்கிரஸ் விமர்சனம்: இதற்கிடையில் இலவச மின்சாரம் என்ற ஆம் ஆத்மியின் அறிவிப்பே வெறும் கண் துடைப்பு நாடகம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைரா தனது ட்விட்டர் பக்கத்தில், “பகவந்த் மான் அரசு தந்திரம் செய்தே இலவச மின்சாரம் வழங்கவிருப்பதை நான் அறிந்து கொண்டேன். 10 ஏக்கர் அல்லது அதற்கும் மேல் வைத்துள்ள விவசாயிகளுக்கு ட்யூப் வெல் கட்டணம் விதித்து அதில் வரும் பணத்தில் 300 யூனிட் மின்சாரம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியின்போது இந்த ஏமாற்று வெலை பற்றி அரவிந்த் கேஜ்ரிவால் ஏதும் தெரிவிக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.