டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா; அடுத்த அலை வந்தாலும் அச்சப்பட வேண்டாம்! ஆறுதலளிக்கும் மருத்துவர்

கொரோனா அலை ஓய்ந்துவிட்டதாக நினைத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி வெளிக்காற்றை சுவாசித்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் அத்தியாவசியமான பாதுகாப்பான முகக்கவசம் அணிவதைக்கூட பல மக்கள் மறந்துவிட்டனர். இந்நிலையில் சீனாவில் மீண்டும் உச்சமெடுக்கத் தொடங்கியிருக்கிறது கொரோனா.

அங்கே ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். இதையடுத்து இந்தியாவிலும் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்திருக்கிறது. டெல்லியில் அந்தப் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. நொய்டா உள்ளிட்ட சில பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லி

தொற்று எண்ணிக்கை வேகமெடுத்துள்ளதை அடுத்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்னும் சில தினங்களில் கூடி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க இருக்கிறது. ”மறுபடி மொதல்லேருந்தா…..” என்ற கேள்வி மக்கள் மத்தியில் கிளம்பியிருக்கிறது. நான்காவது அலை வந்தால் தமிழகம் தாங்குமா…. தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மக்கள் எச்சரிக்கையாக வேண்டுமா…., சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலியிடம் கேட்டோம்…

”இந்தப் பரவல் அதிகரிப்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை, எதிர்பார்த்ததுதான். இது இப்படித்தான் அதிகரிக்கும் என்பதை பல ஆய்வுகளிலும் தொடர்ந்து சொல்லியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், கொரோனாவை முற்றிலும் தடுப்பதற்கு நம்மிடம் தடுப்பூசிகள் இல்லை. அடுத்தது முகக் கவசம் அணிதல், கூட்டம் கூடுவதில் கட்டுப்பாடு போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மக்களுக்குத் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். பொது சுகாதார விதிமுறைகள் எவையும் கறாராகப் பின்பற்றப்படுவதில்லை.

புதிய கொரோனா வைரஸ்

கூடவே உருமாறிய வேரியன்ட்டுகள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் சிறிதும் பெரிதுமான அலைகள் வந்துகொண்டுதான் இருக்கும். அது இயல்பானதும்கூட. எண்ணிக்கை அதிகரிப்பதாலேயே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நம் தரப்பில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிவது, கூட்டமான இடங்களைத் தவிர்ப்பது, தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது, பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இது மக்களுக்கான அறிவுரை.

பூங்குழலி

அரசுத் தரப்பில் செய்ய வேண்டியதும் இருக்கிறது. எந்த மாதிரியான வேரியன்ட் பரவுகிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். மூன்றாவது அலையில் பரவிய ஒமிக்ரான் வேரியன்ட் வேகமாகப் பரவினாலும் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன. இப்போது ஒமிக்ரானில் பிஏ1, பிஏ 2 என இரண்டு துணைப்பிரிவுகள் வந்துள்ளன. அதைத் தாண்டி இன்னொரு வேரியன்ட்டாக XE என்ற ஒன்றும் பரவிக்கொண்டிருக்கிறது.

இது பிஏ1, பிஏ2 இரண்டைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகப் பரவக்கூடியது என்றும் சொல்லப்படுகிறது. இது எந்தளவுக்குத் தீவிரமான தொற்றை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து இன்னும் ஆய்வுகள் வர வேண்டும். அதுவரை நாம் வழக்கம்போல கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினாலே எத்தனை வேரியன்ட்டுகள் வந்தாலும் அச்சப்படத் தேவையில்லை” என்கிறார் டாக்டர் பூங்குழலி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.