தண்டேலி ஆற்றில் சுற்றுலா பயணியர் மீட்பு| Dinamalar

உத்தர கன்னடா : உத்தர கன்னடாவில், கணேஷ்குடியில், விதிகளை மீறி, அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணியர் பயணித்த ரப்பர் படகு ஆற்றில் கவிழ இருந்தது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணியர் உயிர் தப்பினர்.உத்தர கன்னடா கணேஷ்குடி அருகில் தண்டேலி சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. இங்கு பாய்ந்தோடும் ஆற்றில் ரப்பர் படகு மூலம் சுற்றுலா பயணியர் அழைத்து செல்லப்படுவர். இதற்காகவே பலரும் விரும்பி இங்கு வருகின்றனர்.

இந்நிலையில், தண்டேலியில் ஆற்றில் பல படகுகளில் சுற்றுலா பயணியர் பயணித்து கொண்டிருந்தனர்.திடீரென தண்ணீரின் வேகம் அதிகமானதால், மற்ற படகுகள் கரைக்கு ஒதுங்கி, சுற்றுலா பயணியர் இறக்கி விடப்பட்டனர்.கடைசியாக ஒரு படகில் இருந்த சுற்றுலா பயணியர் இறங்குவதற்குள் படகு ஆட்டம் காண துவங்கியது. இதனால் அவசரமாக இறங்கும் போது, பயணியர் சிலர் தண்ணீரில் விழுந்தனர்.அப்போது அங்கிருந்த மற்றவர்கள், அவர்களின் கைகளை பிடித்து கொண்டனர். இதனால் தண்ணீரில் அடித்து செல்லப்படாமல் காப்பாற்றப்பட்டனர்.பயணியர் இறங்கவில்லையெனில், நீரின் வேகத்தில் படகுடன் அடித்து செல்லப்பட்டிருப்பர். இந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.இது குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன் கூறுகையில், ”விதிமுறையை மீறியிருப்பது இந்த வீடியோவில் தெரிகிறது. இது தொடர்பாக தனிக்குழு அனுப்பி, விசாரணை நடத்த உத்தரவிடப்படும்,” என்றார்.தன்டேலியில் இதுபோன்று விதிமுறை மீறப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இதுபோல நடந்தள்ளதாக, அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.வழக்கமாக, இதுபோன்ற ரப்பர் படகில் அளவுக்கு அதிகமாக பயணியர் அழைத்து செல்லப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.