சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 16, 17-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைபகுதி மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 17-ம் தேதி மேற்கூறிய பகுதிகள் மற்றும் ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.